ஊத்தங்கரை அருகே கோமாரி நோய்க்கு 30 மாடுகள் பலி

ஊத்தங்கரை, டிச.2: ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் கோமாரி நோயால் 30 மாடுகள் பலியாகியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வீராட்சிகுப்பம் ஊராட்சி ஓபுளிநாயக்கன்பட்டி. தாதிநாயக்கன்பட்டி, கருவானூர் உள்ளிட்ட கிராமங்களில், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், பசு மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட பசுமாடுகள், கால்களில் புண் ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலையில் உட்கார்ந்தவாறே உள்ளன. மேலும், மடிநோயாலும் மாடுகள் அவதிப்படுகின்றன. ஊத்தங்கரை ஒன்றியத்தில் நொச்சிப்பட்டி, மண்ணாடிப்பட்டி, மூங்கிலேரி, சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், கடந்த 10 நாட்களில் மட்டும் கோமாரி நோயால் 30 பசுமாடுகள் இறந்துள்ளது.

இதனால், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து கோமாரி தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வீராட்சிகுப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘இப்பகுதியில் பசு மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து வருவதால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஒரு பக்கம் அடைமழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதமடைந்துள்ளது. மறுபுறம் கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் மடிவீக்க நோயால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தனியார் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க முடியாத நிலை உள்ளதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கால்நடை மருத்துவ முகாம்கள் அமைத்து, பசுக்களை கோமாரி மற்றும் மடி நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்,’ என்றார்.

Related Stories:

More