அனுமதியின்றி விடப்பட்ட ஏரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, டிச.2: காவேரிப்பட்டணம் ஒன்றியம், கோட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கீதா கோவிந்தசாமி, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோட்டப்பட்டி ஊராட்சி, தாதனூர் செக்கிலிகுட்டை ஏரியில், தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஏரியை மீன்பாசி குத்தகை விடும் பொருட்டு, ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், எங்கள் ஊராட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள், கடந்த மாதம் 28ம் தேதி புலியூர் கிராமத்தில் கோட்டப்பட்டி ஏரி மற்றும் செக்கிலிகுட்டை ஏரியை ஏலம் விட்டுள்ளனர். ஊராட்சி செயலர் சர்தார்பாஷாவை வைத்து கொண்டு, கட்டப்பஞ்சாயத்து மூலம் மேற்படி 2 ஏரிகளுக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.

கோட்டப்பட்டி ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த இரண்டு ஏரிகளை ₹10 லட்சத்து 5 ஆயிரத்திற்கும், புலியூர் ஜம்பு ஏரியை ₹26 லட்சத்து 75 ஆயிரத்திற்கும், அதனை சுற்றியுள்ள தென்னை மரங்களை ₹3 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் ஏலம் விட்டுள்ளனர். அரசு அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஊராட்சி செயலர் சர்தார்பாஷா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More