உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தர்மபுரி, டிச.2: தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களிடம் எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு எச்ஐவி, எய்ட்சுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என்பதை கருப்பொருளாக கொண்டு, உலக எய்ட்ஸ் தினம் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்து, எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழியை வாசிக்க, அதனை தொடர்ந்து அனைத்து அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், டிஆர்ஓ அனிதா, சப் கலெக்டர் சித்ரா விஜயன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சவுண்டம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: