விதை, அங்கக சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, டிச.2: தர்மபுரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவசங்கரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: இயற்கை விவசாயம் என்பது எரு, பசுந்தாள் உரம், மண்புழு உரம், பஞ்சகாவியா, இயற்கை பூச்சி விரட்டிகள் கொண்டு விவசாயம் செய்யும் முறையாகும். இம்முறையில் விவசாயம் செய்வதால், உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்கள், பழங்கள், காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசடைவது குறைகிறது. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை முறைகள் கையாளும்போது செலவுகள் குறைகிறது. மண் வளத்தை மேம்படுத்தி நோய் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளரவும், இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. விவசாயிகள் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு அங்ககச் சான்று வழங்கப்படுகிறது. அங்கக வேளாண்மைக்கு தரச்சான்று பெற விரும்பும் விவசாயிகள் தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். அங்கக சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் பண்ணையின் பொது விவர குறிப்பு, வரைபடம், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், நிலஆவணம் நகல், நிரந்தர கணக்கு எண் நகல் மற்றும் ஆதார் கார்டு நகல்  உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: