அரசு போக்குவரத்துக்கழக பஸ்களுக்கு தகுதிச்சான்று வழங்க அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி,டிச.2: பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள 4 அரசு போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து சுமார் 240க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை கோவை மற்றும் பழனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக, சில  மாதமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம்  துவக்கத்திலிருந்து ஊரடங்கு தளர்வு  இருந்தாலும், முதற்கட்டமாக 30சதவீத பஸ்களும் அடுத்த கட்டமாக  50சதவீதம், பின் 60சதவீத  பஸ்களும் இயக்கப்பட்டது. தற்போது 100சதவீத பஸ் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு பஸ்கள் பலவற்றிற்கு, தகுதிச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நேற்று, பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள், பஸ்சின் மேற்கூரையில் மழைபெய்தால் கசிவு ஏற்படுகிறதா என்றும், நல்ல நிலையில் உள்ளதா என  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில பஸ்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்: ஆண்டுதோறும் இரண்டு முறை  பஸ்கள் ஆய்வு மேற்கொண்டு தகுதிச்சான்று வழங்கப்படுகிறது. இந்த முறை கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதமாக பஸ் இயக்கம் இல்லாமல் இருந்தது. தற்போது, ஊரடங்கு தளர்வு அதிகமாகியுள்ளதால் 100சதவீத பஸ் இயக்கப்படுகிறது. இதையொட்டி அரசு போக்குவரத்துக்கழக  பஸ்கள் ஆய்வு மேற்கொண்டு தகுதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பஸ் நிலையத்தில் நேரடியாக வந்து முதற்கட்ட ஆய்வில், 12 பஸ்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் இன்னும் 7 நாட்களில் சரிசெய்து, தகுதிச்சான்று பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோபாலபுரம் செல்லும் ஒரு அரசு பஸ்சின் மேற்கூரையில் குறைபாடு கண்டறியப்பட்டதால் அதனை  இயக்காமல், பணிமனைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. அந்த பஸ்சில் குறைபாடு நிறைவு செய்து தகுதிச்சான்று பெற்று இயக்க தெரியப்படுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: