பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது

கோவை, டிச. 2:  கோவையில் பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி சத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் குட்டை செந்தில் (எ) செந்தில்குமார்(38). கார் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி (38). செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் (31) ஆகியோர் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், சுதாகரிடம், செந்தில்குமார் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று பணம் கேட்பதற்காக சுதாகர் தனது நண்பர்கள் சிலருடன் செந்தில்குமார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் அங்கு இல்லை. மனைவி அம்சவேணி மட்டும் இருந்தார். அவரிடம் சுதாகர் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு அம்சவேணி தனது கணவர் வெளியில் சென்றுவிட்டார். வந்தவுடன் பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அம்சவேணியை தாக்கினர். மேலும் வீட்டு முன்பு நின்றிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பின்னர் அந்த கும்பல் அம்சவேணியை தாக்கி மிரட்டி விட்டு சென்றது. இது குறித்து அம்சவேணி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை கணபதியை சேர்ந்த சுதாகர் (31), கணபதி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் (25), ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன் (27), நாமக்கல் மாவட்டம் செம்பலிகரடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (26),  பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த கவுதம் (27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: