அண்ணா மேம்பாலம் அருகே பரபரப்பு லாரி மீது மோதிய சொகுசு கார்: ஏர்பேக் ஓப்பன் ஆனதால் 2 பேர் உயிர் தப்பினர்

சென்னை: அண்ணா மேம்பாலம் அருகே கட்டுமான கழிவுகளை ஏற்றி வந்த லாரி மீது சொகுசு கார் மோதியது. பின்னர் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா கம்பத்தில் மோதி சாலையின் நடுவே நின்றது. ஏர்பேக் ஓப்பன் ஆனதால்  காரில் வந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (42). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சொகுசு காரை எடுத்துக்  கொண்டு கோடம்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை நோக்கி வேகமாக வந்துள்ளார்.  

அண்ணா மேம்பாலம் அருகே உள்ள உத்தமர் காந்தி சாலை சந்திப்பில் வந்தபோது  சேத்துப்பட்டு நோக்கி கட்டுமான கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது கார் மோதியது. பின்னர் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கம்பத்தில் மோதி சாலையின் நடுவே வந்து நின்றது. வேகமாக வந்து மோதியதில் காரில் இருந்த ஏர்பேக் ஓப்பன் ஆகிவிட்டது. இதனால், காரை ஓட்டி வந்த லிவிங்ஸ்டன் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More