அடுக்குமாடி குடியிருப்பில் 10 அடியில் திடீர் பள்ளம்: ஆர்டிஓ, வட்டாட்சியர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சி ஜெகதீஷ் நகரில் குணசேகரன் என்பவருக்கு 4 அடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள கால்வாயை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கட்டிடத்தில், குணசேகரன் வசிக்கும் குடியிருப்பின் வரவேற்பறையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் ஊற்று வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த 7 குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

தகவலறிந்து தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பல மணிநேரமாக நேற்று ஆய்வு செய்தனர். மேலும், இந்த ஆய்வின்போது கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவன ஊழியரிடம் விசாரணை நடத்தினர்‌. பின்னர், ஜெகதீஷ் நகருக்கு வரும் கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பிய நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கட்டிடத்தை இடிப்பதற்காக வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. அப்போது, கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்கபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மேலும், பொதுப்பணி துறையினர் அதிகாரிகளை வரவழைத்து, பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி,  மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் மூலம் அப்பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தாம்பரம் ஆர்டிஓவிடம் கேட்டபோது, 4 அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பில்டர் சரிவர கட்டாததால் அப்பகுதியில் 10 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அதில் குடியிருந்த 7 குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம்.

அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அத்தியாவசிய உதவிகளை செய்கிறோம். இதுதொடர்பாக ஓரிரு நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். அப்போது, ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More