வெள்ளத்தில் சிக்கி சிறுமி பலி: எம்ஏல்ஏ அஞ்சலி

செங்கல்பட்டு: செல்கல்பட்டு அருகே ஓடையில் குளிக்க ெசன்ற சிறுமி பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் யுத்திகா (14). இவரது தோழிகள் அதே பகுதியை சேர்ந்த தர்ஷினி (14), திவ்யா (14). 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கின்றனர். செங்கல்பட்டில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், 3 சிறுமிகளும் நேற்று முன்தினம் மாலை, தங்களது கிராமத்தின் அருகே ஓடையில் குளித்தனர்.

அப்போது யுத்திகா, ஓடையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த 2 சிறுமிகளும், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களும் தண்ணீரில் அடித்து சென்றனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்த முதியவர், தர்ஷினி மற்றும் திவ்யாவை பத்திரமாக மீட்டார். யுத்திகா தண்ணீரில் மாயமானார். தகவலறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று,  இரவு முழுவதும் தேடினர். ஆனால் சிறுமி யுத்திகா கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை ஓடைக்குள் இருந்த மரப்புதருக்குள் யுத்திகாவின் சடலம் இருந்தது. அதனை, பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள்  மீட்டனர். இதையடுத்து பாலூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், சிறுமி தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவத்தை அறிந்ததும், செங்கல்பட்டு எம்ஏல்ஏ வரலட்சுமி மதுசூதனன், சாஸ்திரம்பாக்கம் கிராமத்துக்கு சென்றார். அங்கு சிறுமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது பொற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories: