அரசு பள்ளிக் கட்டிடம் பலவீனம் சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட தலைமை ஆசிரியை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் நீர் நிலையில் கட்டப்பட்ட அரசு பள்ளிக் கட்டிடம் கனமழையால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அச்சமடைந்த தலைமை ஆசிரியை சாலையில் அமர்ந்து மதிய உணவு உட்கொண்டு தனி ஒருவராக போராட்டத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய உயர்நிலைப் பள்ளிக்கு முறையாக நிலம் தேர்வு செய்யாமல், அவசரகதியில் அதே பகுதி சின்ன வேப்பங்குளத்தின் கரையில் 2 வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

இப்பள்ளியில் தற்போது 125 மாணவர்கள், 97 மாணவிகள் படிக்கின்றனர். தற்போது, உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் விரிவுப்படுத்த முடியாத நிலை உள்ளது. குளக்கரை என்பதால் பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கட்டிடத்தின் ஒருபகுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியையின் அலுவலகம் செயல்படுவதால், மாணவர்களுக்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதவிர மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த முடியவில்லை.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பள்ளி கட்டிடம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி கட்டிடத்தை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றி புதிய இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என தலைமை ஆசிரியை கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பலவீனமான கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ஆபத்தானது என வலியுறுத்தி, தலைமை ஆசிரியை கலா, நேற்று தனி ஒருவராக போராட்டத்தில் ஈடுபட்டார். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் மதிய உணவை சாலையில் அமர்ந்து சாப்பிட்டார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை கலா கூறுகையில், குளத்தின் கரையில் பள்ளிக்கட்டிடம் உள்ளதால், தண்ணீர் ஊறி கட்டிடம் சிறிது, சிறிதாக சேதமடைந்துள்ளது. அதனால், 6 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்பறை கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க விரைந்து நிலம் தேர்வு செய்ய வேண்டும். தற்போது பெய்த கனமழையால் கட்டிடம் முழுவதும் வலுவிழந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. அசம்பாவித சம்பவம் நடந்தால், யார் பொறுப்பேற்பது என்றார்.

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் நிலம் கண்டறியும் பணிகள்  நடக்கிறது. மஞ்சள் நீர் கால்வாய் அருகே 5 ஏக்கர் கோயில் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சின்ன வேப்பங்குளம் கரை உள்பட நீர் நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறியும் பணிகளும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.

Related Stories: