எஸ்.தரைக்குடி பகுதியில் வீணாகும் மழைநீரை சேமிக்க தடுப்பணை 20 கிராம மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, டிச.1:  எஸ்.தரைக்குடி பகுதியில் கடலில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க தடுப்பணை கட்டவேண்டும் என 20 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம் எஸ்.தரைக்குடி பகுதியில் செவல்பட்டி, வி.சேதுராஜபுரம், கொண்டுநல்லான்பட்டி, உச்சிநத்தம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

கரிசல் காட்டு பகுதி என்பதால் மிளகாய், மல்லி சுமார் 15ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இதுபோக வெங்காயம், கத்தரி போன்ற தோட்டப்பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் கஞ்சம்பட்டி ஓடை முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இப்பகுதிக்கு விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மலை பகுதியிலிருந்து மழை காலத்தில் உபரிநீர் வெளியேற்றம் மற்றும் காட்டாறு வெள்ளம் ஏற்பட்டால் மழை தண்ணீரை கொண்டுவர அமைக்கப்பட்ட ஓடை ஆகும்.

ஆனால் இந்த ஓடை சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தூர்வாரப்பட வில்லை. இதனால் சீமை கருவேலம் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. தண்ணீரை சேமித்து வைப்பதற்கு தடுப்பணைகள் கிடையாது. இதனால் மழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடி வரும் மழை நீர் மற்றும் காட்டாறு வெள்ளம் இந்த ஓடையில் செல்ல வழியில்லாமல், பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்று வேம்பார் கடலில் வீணாக கலந்து வருகிறது. இதனால் ஆண்டு தோறும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் முழுமையாக நிரம்ப வழியில்லாமல் போகிறது.

மழை நீரை சேமிக்காததால் கோடை காலத்தில் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாய காலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமலும், கோடை காலத்தில் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத அவலம் பல ஆண்டுகளாக தொடர்வதாக இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். எனவே கஞ்சம்பட்டி ஓடையை மராமத்து செய்து, நிரந்தரமான பெரிய அளவிலான தடுப்பணைகளை அமைக்க பொதுப்பணித் துறை முன் வரவேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: