வைகையில் நீர் வரத்து அதிகரிப்பு ஆற்றில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

ராமநாதபுரம்,டிச.1:  வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் மக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பார்த்திபனூர் மதகணை வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து, நவ.27ல் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் பார்த்திபனூர் மதகணைக்கு தண்ணீர்

 வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பார்த்திபனூர் மதகணையில் இருந்து வலது பிரதான கால்வாயில் வினாடிக்கு 1,200 கன அடி வீதம், இடது பிரதான கால்வாய், பரளை கால்வாய் ஆகியவற்றில் வினாடிக்கு தலா 800 கனஅடி வீதம், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேவேளையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தற்போது 285 மில்லியன் கனஅடி (சுமார் 5 அடி) அளவு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. கண்மாயில் சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்மாய்க்கு வரும் நீரின் அளவை பொறுத்து கண்மாயிலிருந்து உபரி நீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் காருகுடி தலை மதகணை, அரசரடி வண்டல் மதகணை ஆகியவற்றை கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்குதல், ஆற்றில் குளித்தல், மொபைல் போன்களில் செல்பி எடுத்தல் போன்ற செயல்களை பொதுமக்கள், சிறுவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மதனசுதாகரன், பிஆர்ஓ நவீன் பாண்டியன், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் நிறைமதி, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், ஆனந்த் பாபுஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: