×

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்

திருவாரூர், ஏப்.23: திருவாரூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயறு மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. மேலும், நெல் பயிருக்கு அடுத்தப்படியாக உளுந்து, பச்சைப் பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக நெல் கொள்முதல் நடைபெறுவதுபோல் தற்போது டெல்டா மாவட்டங்களிலும் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் உளுந்து மற்றும் பச்சைப் பயிறு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தின் மூலமாக மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும் பணி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்குழுவிற்குட்பட்ட திருவாரூர், மன்னார்குடி மற்றும் வடுவூர் ஆகிய விற்பனைக்கூடங்களில் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருவாரூர், மன்னார்குடி மற்றும் வடுவூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக உளுந்து 230 மெ.டன் மற்றும் பச்சைப் பயறு 170 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உளுந்து அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.60ம், பச்சைப்பயிறு கிலோ ஒன்றுக்கு ரூ.71.96 என கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதலுக்கு கொண்டு வரப்படும் உளுந்து மற்றும் பச்சைப்பயறு வகைகள், கலப்புகள், தூசிகள் இல்லாமலும், ஈரப்பதம் 12 சதவிகிதத்திற்குள் இருக்குமாறும், பூச்சி மற்றும் வண்டுகளால் பாதிப்படையாமல் நன்கு தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், விற்பனைக்குழு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் திருவாரூர், மன்னார்குடி மற்றும் வடுவூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைப்பயறை விற்பனை செய்யலாம். இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur district ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 1,540...