×

திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை

திருவாரூர். ஏப்.23: திருவாரூரில் இயங்கி வரும் மாவட்ட நூலகத்தின் சாலையினை சீரமைத்து தர வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் பைபாஸ் சாலை அருகே அரசின் மாவட்ட நூலகமானது இயங்கி வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 12 மணி நேரம் இயங்கும் இந்த நூலகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 522 புத்தகங்கள் இருந்து வரும் நிலையில் இதனை வாசிப்பதற்காக தினந்தோறும் சுமார் 300 வாசகர்கள் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் பணிகளிலிருந்து ஒய்வு பெற்று 60 வயதை கடந்தவர்கள். இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலிருந்து சைக்கிள் மூலமாகவே வந்து செல்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ஆய்வு கட்டுரைகள் மற்றும் போட்டி தேர்வுகளை சந்திக்கும் மாணவ, மாணவிகள் உட்பட பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.

பைபாஸ் சாலையிலிருந்து இந்த நூலகத்தின் உள்ளே செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருப்பதால் இதனை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த சாலையினை சீரமைத்து தர வேண்டும் என்று அங்கு வரும் வாசகர்களும், பொதுமக்களும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நூலக துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வாசகர்கள் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருவது மட்டுமின்றி சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் காரணமாக பல நேரங்களில் வயதான வாசகர்கள் தடுமாறி கீழே விழும் நிலையும் இருந்து வருகிறது.

இது குறித்து வாசகர் தியாகராஜன் என்பவர் கூறுகையில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற எங்களை போன்ற மூத்தகுடி மக்கள் பலரும் இங்கு வந்து செல்கிறோம். ஆனால் இங்கு வருபவர்களில் பலரும் சைக்கிள் மூலமாகவும், நடை பயணமாகவும் வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள சாலையானது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் இதனை பயன்படுத்துவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே விரைவில் இதனை சீரமைத்து தந்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாவட்ட நூலகர் ஆண்டாள் என்பவரிடம் கேட்டபோது, சாலையினை சீரமைப்பதற்கு நூலக துறை சார்பில் நிதி ஓதுக்கீடு இல்லாததால் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த சாலையினை சீரமைத்தால் நலமாக இருக்கும் என்றார்.

Tags : Thiruvarur ,
× RELATED திருவாரூரில் தொடர் மழையால் கமலாலய...