புது மண்ணியாற்றின் கரை உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்

கொள்ளிடம், ஏப். 23: புதுமண்ணிஆற்றின் கரை உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பாசன வசதி தரும் மிகவும் முக்கியமான பிரதான பாசன வாய்க்கால் ஆக இருந்து வருவது புதுமண்ணி ஆறு ஆகும். இந்த வாய்க்காலில் இருந்து பல கிளை வாய்க்கால்கள் பிரிந்து சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து வருகிறது. இந்த வாய்க்காலில் கடந்த மழை காலத்தில் பெய்த அதிக மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடுக்காய்மரம் என்ற இடத்தில் புது மண்ணியாற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு ஏற்பட்ட இந்த உடைப்பை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தற்காலிகமாக மணல்மூட்டைகளைப் போட்டு அடைத்தனர். ஆனால் பல மாதங்கள் கடந்தும் அந்த தற்காலிக அடைப்பு அப்படியே உள்ளது. அதனை அப்படியே விட்டு விட்டால் வரும் மழைக்காலங்களில் மீண்டும் உடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக புது மண்ணி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை நிரந்தரமாக சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More