×

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்

சீர்காழி ஏப் 23: சீர்காழி அருகே மங்கைமடத்தில் பனைஓலையில் விதவிதமான பொருட்கள் செய்து பெண்கள் அசத்தியுள்ளனர். சீர்காழி அருகே மங்கைமடம் மெயின் ரோட்டில் வசிப்பவர் சமூக ஆர்வலர் வெங்கடேசன். இவரது மனைவி கண்மணி. இவர் பனை ஓலையில் கூடை பழக்கூடை, பூஜை கூடை, மாலைகள், பழ தட்டு, தரை விரிப்புகள், விசிறிகள் போன்றவற்றை அழகாக வடிவமைத்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப்போலவே தென்னாம்பட்டினம், அன்னப்பன்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பனை ஓலையில் வீட்டு உபயோக பொருட்கள் செய்வது குறித்து கற்றுக்கொண்டு பல வண்ணங்களில் வீட்டு உபயோகப் பொருட்களை செய்து விற்பனை செய்து வருகின்றனர். பண்டைய காலங்களில் பெரும்பாலும் பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் பனை ஓலை பொருட்கள் மறைந்து தற்போது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வீட்டு உபயோகப்பொருட்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செய்யப்படும் பனை ஓலையில் வீட்டு உபயோக பொருட்களை அனைவரும் வாங்கி பயன்படுத்தினால் சுற்றுச்சூழலை பாதுகாத்து மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். பழமையை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் வீட்டு உபயோக பொருட்களை செய்துவரும் பெண்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை