×

சீரமைக்க கோரிக்கை பதிவு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அலங்கார மணவறை ஏற்பாடு

கரூர், ஏப். 23: கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புதிதாக பதிவு திருமணம் செய்துகொள்ள வருபவர்களுக்கு மணவறை போன்ற அலங்கார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் மற்றும் திருமண பதிவுகள் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு திருமணங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மாலையுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் மணவறை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் மணவறை அலங்காரம் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம், கரூர் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் உள்ள எண் 2 இணை சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய 3 அலுவலகங்களில் மணவறை அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர்களுக்கு ஆதாரமாக இருக்கும் வகையில் மணவறை அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் பதிவு செய்து திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் மணவறை அலங்காரத்தில் மாலை மாற்றி புகைப்படங்கள் எடுத்து அதனை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags :
× RELATED கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில்...