கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி

ஏப்.26, 27ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.23: கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி வருகிற 26, 27 தேதிகளில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மூர்த்தி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனா தடுப்பூசி வரத்து மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. தற்போது 13,920 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இம்மாவட்டத்திற்கு வந்துள்ளது. இது 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும் என்று மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். ஒருபுறம் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை கடுமையாக இருப்பது நோயைக் கட்டுப்படுத்த உதவாது. எனவே, தொழில் மையம் என்ற அடிப்படையில் திருப்பூரின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடவும், கூடுதல் தடுப்பூசி வழங்கவும், கிருமி நாசினி தெளிப்பு, தூய்மைப் பணியை மேற்கொள்ளவும், குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தவும் வலியுறுத்தி வருகிற 26 மற்றும் 27 ஆகிய 2 நாட்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: