சுற்றுலா பயணிகளுக்கு தடை எதிரொலி செக்போஸ்ட் வழியாக வருபவர்கள் ஆய்வுக்கு பின்பே அனுமதி

ஊட்டி,ஏப்.23: நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பர்லியார், குஞ்சப்பனை, கக்கநல்லா மற்றும் கேரள எல்லையோர சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு நீலகிரிக்கு வருபவர்கள் என்ன காரணத்திற்காக வருகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என மாவட்ட எஸ்பி., தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 50 முதல் 65 பேர் வரை பாதித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை இம்மாதம் 30ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்தது. மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களுக்கும் தடை விதித்தது. இந்த கட்டுபாடுகள் 20ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.  இருப்பினும் மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்படவில்லை. அத்தியாவசிய தேவைகள், மருத்துவ பணிகள், தொழில் சார்ந்த பணிகளுக்கு சென்று வர எந்த தடையும் கிடையாது. சுற்றுலா சார்ந்த பயணமாக நீலகிரிக்கு வர அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் வழியாக நாள்தோறும் நீலகிரி வருபவர் எந்த காரணத்திற்காக வருகிறார்கள் என்பது குறித்து உரிய ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்என மாவட்ட எஸ்பி., தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட எஸ்பி., பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாதது என 4 ஆயிரத்து 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.9 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பர்லியார், குஞ்சப்பனை, கக்கநல்லா மற்றும் கேரள மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு நீலகிரிக்கு வருபவர்கள் என்ன காரணத்திற்காக வருகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். காவல் நிலையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2து தவணை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் 27 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

Related Stories: