ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையால் மக்கள் மகிழ்ச்சி

ஊட்டி,ஏப்.23: ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்வதால் மிதமான காலநிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்களும், பின் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்களும் பருவமழை பெய்வது வழக்கம். அதன்பின், மே மாதம் இறுதி வாரத்திலேயே மழை பெய்யும். ஆனால், இம்முறை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்கிறது. சில பகுதிகளில் பகல் நேரங்களிலும் மழை பெய்கிறது. பெரும்பாலான சமயங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

பொதுவாக ஏப்ரல் மற்றும் மாதங்களில் சமவெளிப் பகுதிகளை போன்றே நீலகிரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாலும் மிதமான காலநிலை நிலவுகிறது. இதனை உள்ளூர் மக்கள் அனுபவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை சமவெளிப் பகுதிகளை சேர்ந்த பலர் சூடுதாங்க முடியாமல் ஊட்டிக்கு வந்து சென்றனர். இங்கு நிலவிய குளிரான காலநிலையை அனுபவித்து சென்றனர். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே, தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால், அனைத்து சுற்றுலாத்தலங்களும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, பூங்காக்களிலும் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன. ஆனால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: