×

வாழைத்தோட்டத்தில் வலம் வரும் ரிவால்டோ யானை

ஊட்டி,ஏப்.23: வாழைத் தோட்டம் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் அதனை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் மசினகுடி, மாயார், மாவனல்லா, வாழைத்தோட்டம், சிங்காரா, பொக்காபுரம், ஆனைக்கட்டி உட்பட பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் அதிகளவு உள்ளன. தற்போது இப்பகுதியில் வளர்ப்பு யானைகள் போன்று சில காட்டு யானைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மாவனல்லா கிராமத்தில் இரவு நேரத்தில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் எஸ்ஐ., என்ற ஒரு காட்டு யானை வந்த நிலையில், அந்த யானையை விரட்ட முயன்ற தனியார் காட்டேஜ் உரிமையாளர்கள், அதன் மீது தீ பந்தத்தை வீசி எறிந்தனர். இதில், யானையின் தலை, காது, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனை மீட்டு சிகிச்சை அளிக்க கொண்டுச் செல்ல முற்படும் போது அந்த யானை பரிதாபாக உயிரிழந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் தற்போது 45 வயது மதிக்கத்தக்க ரிவால்டோ என்ற ஆண் யானை தற்போது வலம் வந்தது. இது எந்நேரமும் மக்கள் குடியிருப்புகள் மற்றும் சாலையில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும், குடியிருப்பு அருகே தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வாழை மற்றும் காய்கறி பயிர்களையும் சேதம் ஏற்படுத்தி வந்தது. இதனை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டுச் செல்ல அதிகாரிகள் முற்பட்டனர். ஆனால், சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த யானையை பிடிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தொடர்ந்து அந்த யானையை காட்டிற்குள் விரட்டும் பணிகளையும், பிடிக்கும் பணிகளை வனத்துறையினர் தொடர முடியாமல் போனது.

இந்நிலையில், மீண்டும் இந்த யானை வாழைத் தோட்டம் பகுதிகளுக்கு வந்துவிட்டது. தற்போது எந்நேரமும் மக்கள் வாழும் பகுதிகளில் வலம் வருவதும், சாலைகளில் நின்றுக் கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் நிற்பதும் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, குடியிருப்புகளுக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வாழை, காய்கறி தோட்டங்கள் ஆகியவைகளையும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் நின்றுக் கொண்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை கிளறி, அதில் உள்ள கழிவுகளை உட்க்கொண்டு தற்போது அங்கிருந்து காட்டிற்குள் செல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மனித விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த யானையை உடனடியாக பிடித்து காட்டிற்குள் கொண்டுச் செல்ல வேண்டும் அல்லது புலிகள் காப்பகத்திற்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா பரவலால் திருச்சூர் பூரம் திருவிழாவை எளிய முறையில் கொண்டாட முடிவு