நீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம்

கோவை, ஏப். 23: நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் வழியாக பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை கொண்டு சென்றால் ரூ.50 முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கோவை மாவட்டம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள் போன்றவற்றை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த, நீலகிரி மாவட்ட நுழைவு எல்லையிலேயே சோதனைச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் கல்லார் தூரிபாலத்தின் வடபுறம் ஒரு பிளாஸ்டிக் ஒழிப்பு மையமும், கோத்தகிரி வழியாக செல்லும் சாலையில் ஏற்கனவே வனத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் நெகிழி ஒழிப்பு மையமும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மையம் வழியாக வாகனங்களில் கொண்டு செல்லும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர்களிடம் அபராதத் தொகை விதித்து வசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.50, கார், ஜீப் போன்றவைக்கு ரூ.50, டூரிஸ்ட் வாகனங்கள் ரூ.100, டிப்பர் லாரி, லாரி போன்றவைக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: