×

கொடிவேரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கோபி, ஏப். 23:  கோபி  அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன  வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.ஈரோடு  மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணையில் இருந்து  வெளியேற்றப்படும் தண்ணீர், கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு  தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்திற்கும், 72க்கும்  மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக 700க்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது.தடப்பள்ளி,  அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலமாக 24 ஆயிரத்து 500 ஏக்கர் விளை  நிலங்கள் நேரடியாகவும் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன  வசதி பெறுகிறது.ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி அடுத்த  ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து 10 மாதங்களுக்கு இரு போக  சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படும்.இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம்  147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வாய்க்கால்களிலும் பராமரிப்பு பணிகள்  தொடங்கப்பட்டு தற்போது வரை 35 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. இந்நிலையில்,  பவானிசாகர் அணையில் தற்போது 92 அடி தண்ணீர் உள்ள நிலையில் முதல் போக  சாகுபடிக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு  தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்  திருமூர்த்தி, பாசன சங்க தலைவர் சுபி.தளபதி மற்றும் நிர்வாகிகள்,  விவசாயிகள் கலந்து கொண்டனர்.120 நாட்கள் தொடர்ந்து வழங்கப்படும்  தண்ணீரால் 24,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 15 ஆயிரம் ஏக்கர்  விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் என்பதால் பாசன விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் உரிய  காலமான ஏப்ரல் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Tags : Dam of Khodiveri ,
× RELATED எஸ்டிபிஐ நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு