தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனிவாரியம் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் வாக்குறுதி

சாத்தூர், மார்ச் 24: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்மன் எம்.எல்.ஏ, தொகுதிக்கு உட்பட்ட வாழவந்தாள்புரம், சாமியார்காலனி, சிலோன் காலனி, ராமலிங்காபுரம், அம்மாபட்டி, பெரிய, சின்ன கொல்லபட்டி, சடையம்பட்டி, சத்திரபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ராஜவர்மன் எம்.எல்.ஏ பேசியதாவது: சாத்தூர் தொகுதி மக்களின் நலன் காக்க கொரோனா காலத்தில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்து மாத்திரைகள் வழங்கியுள்ளேன். பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து குடிநீர் பற்றாக்குறையை தீர்த்தேன். தீப்பெட்டி தொழிலாளர்களை பாதுகாக்காக்க தனிவாரியம் அமைப்போன். தீப்பெட்டி தொழிலின் மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் இருக்க நடவடிக்கை எடுப்பேன். என்னை தேர்ந்தெடுத்தால் இப்பகுதி பள்ளிகளின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன். வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து, முக்கிய சாலை சந்திப்புகளில் உயர்மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த வாக்கு சேகரிப்பில் அமமுக கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேமுதிக நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>