கம்பம் அருகே கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கம்பம். மார்ச் 24: கம்பம் அருகே கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கம்பம் அருகே, காமயகவுண்டன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகருமாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பங்குனி பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும். கடந்தாண்டு கொரோனாவால் கொண்டாடப்படவில்லை. இந்தாண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றதுதுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, முல்லைப் பெரியாற்றங்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், நீளமான வேல்களால் அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். பக்தர்கள் பரவசம் பெங்க ஓம்சக்தி பராசக்தி என கோஷம் எழுப்பினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவில் கம்பம், நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். ராயப்பன்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: