×

வங்கி கணக்கிற்கு அதிக தொகை வந்தால் கண்காணிக்க வேண்டும் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 24:  வங்கிகளில் கணக்கு துவங்கி பல மாதங்களுக்கு பின்பு திடீரென அதிகளவில் பணப்பரிவர்த்தனை நடந்தால், அவற்றை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வங்கிகளில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனை குறித்து கண்காணிப்பு தொடர்பான வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் பார்வையாளர்கள்  சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கர நாராயணன், தேர்தல் பார்வையாளர்கள் ராகேஷ்படாடியா, வனஸ்ரீஹீள்ளன்னன்னவர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட வேண்டும். வங்கிகள் மூலம் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து திடீர் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் மற்றும் பணப்பரிமாற்றம் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
 வங்கிகளில் ஒரு சில வாடிக்கையாளர்கள் கணக்கு துவங்கி பல மாதங்களுக்கு பின்பு திடீரென தற்பொழுது அந்த கணக்கில் அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தாலோ அல்லது ஒரு லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தாலோ அது குறித்து கண்காணிக்க வேண்டும்.
ஒரு கணக்கிலிருந்து பல்வேறு நபர்களுக்கு குறைந்த தொகை பணப்பரிமாற்றம் நடைபெறுதல், ஒரு கணக்கிலிருந்து மற்ற கணக்கிற்கு அதிக அளவிலான தொகை வரவு வந்தாலும் அது குறித்தும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை கண்காணிப்பு அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரெத்தினவேல், ராம்குமார் மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election Officer ,
× RELATED அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...