திமுக ஆட்சி அமைந்ததும் உணவு பொருள் வியாபாரிகள் பாதிப்புகள் களையப்படும் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ பேட்டி

மதுரை, மார்ச் 24: திமுக ஆட்சி அமைந்ததும் உணவுப்பொருள் வியாபாரிகளின் பாதிப்புகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ தெரிவித்தார். மதுரை உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு அரசானது உணவு பாதுகாப்பில் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும், ஆனால் உணவு பாதுகாப்பு, பேக்கேஜிங், ஜிஎஸ்டி என அனைத்து படி நிலைகளிலும் அதிமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. அரசுக்கு வரக்கூடிய வருவாய் அதற்கேற்ப தொழில், தொழிலாளர்களின் வளர்ச்சி இவற்றை மனதில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் . இதன்மூலமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் அதனை எல்லாம் செய்ய தவறிய இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் உணவுப்பொருள் வியாபாரிகள் பாதிப்புகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு சங்கங்களை சார்ந்த உணவு பொருள் வியாபாரிகள், ஏராளமான கோரிக்கைகள், பாதிப்புகளை முன் வைத்து பேசினர். குறிப்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் என்பது முறையாக செய்யப்பட வேண்டும், உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு மறுபரிசீலனை செய்கிற வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசு போராடி பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். பேக்கேஜ் லைசென்ஸ் பெற வெறும் ரூ.500 தர வேண்டிய இடத்தில் அதிகாரிகள் ரூ.20ஆயிரம் வரை வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

சில்லறை பலசரக்கு வியாபாரிகள் சார்பில் பால்ராஜ் என்பவர் பேசுகையில், ‘முன்னாள் முதல்வர் கலைஞர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே வணிகர்களை அழைத்து கலந்தாலோசனை கூட்டம் நடத்துவார் அதேபோல் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அந்நிய வர்த்தகத்தால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படாத நிலை ஏற்பட வேண்டும்‘ என்றார். இட்லி மாவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் எளிதில் வீணாகும் இட்லி மாவுவுக்கு 18சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டது. இதில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: