பண்ணைப்பட்டியில் யானைகளால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க சோலார் வேலி அமைக்கப்படும் ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி உறுதி

சின்னாளபட்டி, மார்ச் 24: பண்ணைபட்டி பகுதியில் யானைகளால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க சோலார் வேலி அமைக்கப்படும் என்று, ஐ.பெரியசாமி எம்எல்ஏ உறுதியளித்தார். ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி நேற்று ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.பண்ணைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இப்பகுதியில் அடிக்கடி யானைகள் தொந்தரவால் பயிர்கள் நாசமாகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் நலன் காக்க சோலார் வேலி அமைத்துக் கொடுக்கப்படும். கொரோனா காலத்தில் தமிழக மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போதுகூட அதிமுக அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தேர்தலில் ஓட்டு வாங்கவேண்டும் என்பதற்காக ரூ.2500 கொடுத்துள்ளார்கள். மே 2க்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்’’ என்றார். பிரச்சாரத்தில் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் புதுப்பட்டி அருணாச்சலம், தனபாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனிச்சாமி, பிரம்மசாமி, ஊர்கவுண்டர் பழனிச்சாமி, அம்பை ரவி, புதுப்பட்டி உதயன், காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி, இளைஞர் அணியை சேர்ந்த அருளானந்தம் டி.பண்ணைப்பட்டி அருண், தீனதயாளன், வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: