கன்னியாகுமரி மக்களவை, 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

நாகர்கோவில், ஏப்.23: வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய 48 மணி நேரம் முன்பாக ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளான கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகியவற்றிற்கான பொதுத்தேர்தல் மற்றும்  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியன கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி கட்டடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.மொத்தம் 12 அறைகளில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. துணை ராணுவப்படை உள்ளிட்ட மூன்று அடுக்கு பாதுகாப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் போலீசார் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இன்று (23ம் தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், உதவியாளர் என்று மூன்று பேர் பணியாற்றுவார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 2 பேர் என்று 58 பேர் வரை ஒரு அறையில் பணியாற்றுவார்கள். இவை தவிர நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் 21 மேஜைகளில் எண்ணப்பட உள்ளது. ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் 15 மேஜைகளிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் ஓட்டுகள் 6 மேஜைகளிலும் எண்ணப்பட உள்ளது. அந்த வகையில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் 700 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.வாக்கு எண்ணிக்கை பணிகள் உட்பட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் நுழையும் போலீசார் உட்பட அனைவருக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை ஆர்டிபிசிஆர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதில் நெகட்டிவ் அறிக்கை உள்ளவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மேலும் அனைவருக்கும் முக கவசம், மின்னணு இயந்திரங்களை கையாளுகின்றவர்களுக்கு கிளவுஸ், சானிட்டைசர் போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாகர்கோவில் கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் அரவிந்த் நேற்று காலையில் நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குபதிவு கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அவர் ஆய்வு செய்தார். கண்காணிப்பு காமிராக்கள் செயல்பாடுகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார்.

எந்த தொகுதிக்கு எங்கே?

நாகர்கோவிலில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட பாராளுமன்றம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையமும், முதல் தளத்தில், நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பாராளுமன்றம், சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையமும், 2வது தளத்தின் வலது பக்கம் குளச்சல் தொகுதிக்கு உள்பட்ட பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், இடது பக்கம் கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், கீழ் தளத்தின் கீழுள்ள தளத்தில் பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியின் முதல் தளத்தில், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமும், வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: