×

நாகர்கோவிலில் சுமை தூக்க செல்லும் ஆம்னி பஸ் முகவர்கள்

நாகர்கோவில், ஏப்.23: நாகர்கோவிலில் ஆம்னி பஸ்கள் ஒடாததால் அதன் முகவர்களில் பலர் சுமை தூக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். நாகர்கோவிலில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை வடசேரி ஆம்னி பஸ் நிலையம் பிசியாக காணப்படும். சராசரியாக 90 பஸ்களுக்கு மேல் இங்கிருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இயங்கி வந்தன. கடந்த ஆண்டு கொரோனா தொற்றை அடுத்து போடப்பட்ட ஊரடங்கில் முடங்கிய தொழில்களில் ஆம்னி பஸ்களும் முடங்கின. கொரோனா தளர்வுகள் இருந்த போதிலும் கூட,  பல முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள் தங்களது சேவைகளை தொடங்கவில்லை. இதற்கு அந்த நிறுவனங்கள் அதிகளவு வரியை செலுத்த வேண்டும் என்பதால், சுற்றுலா பயன்பாட்டிற்கு வடமாநிலங்களுக்கு பஸ்களை அனுப்பி விட்டதாக கூறப்பட்டது. இதனால், சுமார் 40 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பஸ்களை இயங்கி வந்தன. இதன்படி நாகர்கோவிலில் இருந்து விடுமுறை நாட்களில் மட்டும் 50 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இதர நாட்களில் 35 பஸ்கள் வரையே இயக்கப்பட்டு வந்தன. மேலும், இயங்கிய பஸ்களிலும், டிக்கெட் கட்டணம் சென்னைக்கு ரூ.600 முதல் 950 வரை ஸ்லீப்பர் மற்றும் ஏசி ஆகியவற்றை ெபாறுத்து வசூலிக்கப்பட்டன. இதனால், பெரிய அளவில் வருவாய் இல்லாவிட்டாலும்,  முகவர்கள் , பஸ் உரிமையாளர்கள் சொற்ப வருவாயை ஈட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது கொரோனா 2வது அலையை தொடர்ந்து, நள்ளிரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம்னி பஸ்கள் மீண்டும் நிறுத்தப்பட்டன. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆம்னி பஸ் முகவர்களில் பலர் நிலைமையை சமாளிக்க முடியாமல், சுமை தூக்குவது மற்றும் கூலி வேலைக்கு ெசல்ல ெதாடங்கியுள்ளனர்.

இதுபற்றி முகவர் ஒருவர் கூறியதாவது: படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பலரும் தற்போது  ஆம்னி பஸ்களில் முகவர்களாக பணியாற்றினோம். கமிஷன் அடிப்படையில் பணியாற்றும் நாங்கள்,  பஸ் நிலைய கடை வாடகை, மின்கட்டணம், அலுவலக உதவியாளர்கள் சம்பளம் என மாதம் தோறும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகும். இதுதவிர எங்களது வீட்டு செலவிற்கும் பாரக்க வேண்டும். கொரோனா பொதுமுடக்கத்தில் திறக்கப்படாத கடைகளுக்கு மாநகராட்சி வாடகை வசூல்செய்தது. அதிலும், தற்போது 7,500 ஆக இருந்த வாடகையை ரூ.20 ஆயிரமாக இந்தாண்டு உயர்த்தி விட்டனர். இந்நிலையில் 2வது ெகாரோனா அலையால் ேபாடப்பட்ட ஊரடங்கில் முற்றிலுமாக பஸ்கள் ஒட வில்லை. இதனால், நிலைமையை சமாளிக்க உடலில் வலு உள்ளவர்கள் சுமை தூக்கும் பணிக்கு  செல்கிறோம். உடலில் அதற்கு வலு இல்லாத நடுத்தர வர்க்க முகவர்கள் என்ன செய்வது என ெதரியாமல் தவித்து, அச்சத்தில் உள்ளோம். எனவே எங்களுக்கு உதவும் வகையில், ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகையை மாநகராட்சி ரத்து ெசய்ய வேண்டும். எங்களுக்கு தமிழக அரசு ஏதாவது உதவி செய்யவேண்டும் எனக் கூறினார்.

Tags : Omni bus ,Nagercoil ,
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி