கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை, ஏப். 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில். இந்த கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயிலுக்கு வந்து கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்டு விடிய, விடிய கும்பி அடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். அடுத்த நாள் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தினை தொடர்ந்து அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு திருநங்கைகள் வெள்ளை புடவை உடுத்தி சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு நடைபெறும் என ஆர்வமுடன் திருநங்கைகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு வருகிற 27ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 28ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருநங்கைகள் கவலையில் இருந்த நிலையில், நேற்று மாலை சேலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என்றும், கூத்தாண்டவரே எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் என பய பக்தியுடன் வழிபட்டனர்.  பின்னர் மகிழ்ச்சியுடன் அனைவரும் கோயில் வளாகத்தில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர். அடுத்த ஆண்டாவது கூத்தாண்டவர் கோயில் விழா வெகு விமர்சையாக நடைபெற வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் வந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் கூத்தாண்டவரே என வழிபட்டு, சென்றனர்.

Related Stories:

>