என்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு

நெய்வேலி, ஏப். 23: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளது. கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக தொமுச தொடர்ந்து இருந்து வருவதால் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் தொமுச சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது 4,300க்கும் மேற்பட்ட தொழிலாளர் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால் தொமுச தேர்தல் நேற்று நடைபெற்றது.

என்எல்சி தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இத்தேர்தலை நடத்துவதற்கு தொமுச பேரவையின் அமைப்பு செயலாளர் வேலுசாமி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியை நடத்தி வருகிறார். இத்தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், அலுவலக செயலாளர், துணைத்தலைவர்கள், பகுதி செயலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் கொரோனா பரவலை முன்னிட்டு என்எல்சி தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>