புதுவையில் இதுவரை இல்லாத உச்சம் ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா: மேலும் 6 பேர் உயிரிழப்பு மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது

புதுச்சேரி, ஏப். 23: புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 987 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது செப்டம்பர் 24ம் தேதி 668 பேர் ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா 2வது அலை, அதைவிட கிடு கிடுவென அதிகரித்து வருகிறது. நேற்று, மேலும் 5 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 4,675 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 837, காரைக்கால் - 89, ஏனாம்- 40, மாகே- 21 என மொத்தம் 987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்காலில் ஒரு முதியவரும், புதுச்சேரியில் 2 பெண்கள் உள்பட 5 பேரும் என மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 726 ஆகவும், இறப்பு விகிதம் 1.44 ஆகவும் உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 50,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 4,816 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மொத்தமாக 5,923 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 464 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 30,857 பேர், முன்களப் பணியாளர்கள் 18,174 பேர், பொதுமக்கள் 1,10,842 என மொத்தமாக 1 லட்சத்து 77 ஆயிரத்து 047 பேருக்கு (2வது டோஸ் உள்பட) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்றும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க அரசும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விஏஓ, மனைவி

அடுத்தடுத்து இறப்பு

கொரோனா என்ற கொடிய பெருந்தொற்றுக்கு புதுச்சேரியில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 70 வயது முதியவரும், ஜிப்மரில் புதுச்சேரி லாஸ்பேட்டை பாரதி நகரை சேர்ந்த 62 வயது மூதாட்டியும், நெசவாளர் நகரை சேர்ந்த 72 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெட்டப்பாக்கம் வடுவகுப்பத்தை சேர்ந்த 55 வயது பெண்ணும், அவரது கணவருமான 57 வயதான கீழுர் கிராம நிர்வாக அலுவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல் 33 வயது தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

Related Stories:

>