மா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் கண்காட்சி

கிருஷ்ணகிரி, ஏப்.23: பையூரில் மா, தென்னை மற்றும் வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பயிலும் மாணவர்கள் தங்கி பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். அவர்கள்  பையூரில் மா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப்பொருட்கள் கண்காட்சியினை நடத்தி, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். அதன்படி, மாவில் மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாங்காய் மிட்டாய்கள், ஜாம் மற்றும் ஜெல்லி, மா ஊறுகாய், மா பழச்சாறு, மாவடு போன்ற பொருட்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் உதிரும் மா பிஞ்சுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கும், மாங்காயில் சிறுதொழில் தொடங்கும் வகையில் மா ஊறுகாய் பாக்கெட்டுகள் செய்வதற்கும் செயல் விளக்கம் அளித்தனர்.

அதேபோல், தென்னையில், பிஸ்கெட்டுகள், மிட்டாய்கள், அழகு சாதன பொருட்கள், தேங்காய் எண்ணெய், இளநீரை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுப் பொருட்கள், தேங்காய் பாலில் உற்பத்தி செய்யப்பட்ட சோப்பு, தேங்காய் பர்பிகள் போன்றவை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், கொப்பரையில் இருந்து தேங்காய் எண்ணெய் பிரித்தெடுப்பது, தேங்காய் சோப்புகள் தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மேலும், வாழையில், கழிவு உரங்கள், வாழை சிப்சுகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்(ஜெல்லி, ஜாம்), வாழை பழச்சாறுகள் போன்றவை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>