கள்ளக்காதலியின் கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

கிருஷ்ணகிரி, ஏப்.23: பர்கூர் அருகே கள்ளக்காதலியின் கணவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே போர்மன்னன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(38). இவரது மனைவி சித்ரா(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சித்ராவுக்கும், எம்.ஜி.அள்ளி சஞ்சய் நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன்(22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த கிருஷ்ணமூர்த்தியும், அவரது உறவினரான பூ வியாபாரி மாதேஷ்(40) என்பவரும்,  வைத்தீஸ்வரனை கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, கிருஷ்ணமூர்த்தி தனது டூவீலரில் மாதேசுடன் போர்மன்னன்கொட்டாயில் இருந்து, மருதேப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கொல்லப்பட்டி கருங்கல்மேடு என்னுடத்தில் சென்ற போது, வைத்தீஸ்வரன் வேகமாக காரை ஓட்டி வந்து, கிருஷ்ணமூர்த்தியின் டூவீலர் மீது கொலை செய்யும் நோக்கில் பின்னால் மோதி உள்ளார். இதில், பின்னால் உட்கார்ந்திருந்த மாதேஷ், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை கண்ட கிருஷ்ணமூர்த்தி, அங்கிருந்து டூவீலரில் தப்பிவிட்டார்.

அப்போது அங்கு வந்த வைத்தீஸ்வரனின் தந்தை வெங்கடேசன்(50), தாய் ஈஸ்வரி(45), அண்ணன் வெற்றிவேல்(25) ஆகியோர் மாதேசை கையாலும், கல்லாலும், இரும்பு ராடாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாதேஷ் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து, வைத்தீஸ்வரன் மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள அவரது தாய் ஈஸ்வரி, அண்ணன் வெற்றிவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>