மாவட்டத்தில் இதுவரை ₹48.83 லட்சம் அபராதம் வசூல்

கிருஷ்ணகிரி, ஏப்.23:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இதுவரை ₹48.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் 2,62,356 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 10,537 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, 8,917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், 16,604 சுகாதார பணியாளர்ளுக்கும், 17,588 முன்கள பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட 89,554 பொதுமக்கள் என மொத்தம் 1,23,746 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு கொரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவ உபகரணங்கள் இருப்பில் உள்ளது.

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளான சித்தா, யோகா, இயற்கை வைத்தியம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. முகக்கவசம் அணியாதவர்கள், தனிமைப்படுத்தல் விதிமுறை மீறியவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிலிருந்து அபராதமாக இதுவரை ₹48 லட்சத்து 83 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை, வருவாய் துறை, காவல் துறை இணைந்து பிற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை(கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலத்தை தவிர்த்து) தீவிர சோதனை மேற்கொண்டு உரிய அனுமதி பெற்ற (இ-பாஸ்) வாகனங்கள் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>