வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்

தர்மபுரி, ஏப்.23: வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர் என சான்று பெற வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். எஸ்பி பிரவேஷ் குமார், சப் கலெக்டர் பிரதாப் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்தையன் (அரூர்), தணிகாச்சலம் (பென்னாகரம்), சாந்தி (பாலக்கோடு), நாசீர் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி), கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன் (தேர்தல்), நாராயணன் (பொது), தாசில்தார்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், தலா 14 வாக்கு எண்ணும் மேசைகளும், தபால் வாக்குகள் எண்ணுவதற்காக, 4 மேசைகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு வேட்பாளரும், வாக்கு எண்ணும் மேசைகளுக்காக 14 முகவர்களையும், தபால் வாக்குகள் எண்ணப்படும் 4 மேசைகளுக்கு, தனியாக 4 முகவர்களையும் நியமித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி, சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் நியமனம் செய்யப்பட உள்ள முகவர்களின் பட்டியலை, உரிய காலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து, முகவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முகவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர் என சான்று வரப்பெற்றவுடன், ஒவ்வொரு முகவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வாக்கு எண்ணும் மேசை வாரியாக தனித்தனியாக வழங்கப்படும். வேட்பாளர்கள், வேட்பாளரின் முதன்மை முகவர் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு முக கவசம் மற்றும் கையுறை அணியாவிட்டால், கண்டிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணும் தினத்தன்று, அனைத்து முகவர்களும் காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும். அனைத்து முகவர்களும், விதிமுறைகளை கடைபிடித்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எவரேனும் விதிமுறைகளை மீறி நடந்தால், உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: