உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

நெல்லை, ஏப். 23: உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் 3,429.61 மெட்ரிக் டன் யூரியா, 415.989 மெட்ரிக் டன் டிஏபி, 1055.63 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2035.584 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 6,936.81 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டு விலையிலேயே 2021-22ம் ஆண்டிற்கான டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையின் போது உரம் வாங்குபவருக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். உரம் வாங்கிச் செல்லும் போது விவசாயிகள் அரசு அறிவித்துள்ளபடி கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகள் திடீர் ஆய்வின் போது வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலும், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தாலும், ஆவணமின்றி விற்பனையில் ஈடுபட்டாலும் உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: