திருட்டு, காணாமல் போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன் மீட்பு

திருவாரூர், ஏப்.20: திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.11 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் அதிரடியாக மீட்கப்பட்டது. இதனை எஸ்பி கயல்விழி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020-21ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி கயல்விழி உத்தரவின் பேரில் எஸ்ஐ ராஜா என்பவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் மாவட்ட அளவில் களவுபோன மற்றும் காணாமல் போன செல்போன்கள் தொடர்பான புகார் மனு விபரங்களை காவல் நிலையம் வாரியாக சேகரித்து சைபர் செல் காவல் நிலையம் மூலம் தொடர் விசாரணை செய்தனர். பின்னர் தனிப்படையினர் நடத்திய அதிரடி விசாரணையில் களவுபோன மற்றும் காணாமல் போன ரூ.1 லட்சத்து 500 மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி., கயல்விழி சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை (மனுதார்கள்) நேற்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். இது குறித்து எஸ்பி கயல்விழி கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2020-21ம் ஆண்டில் செல்போன்கள் களவு மற்றும் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ஆண்டு முதல் இதுவரை ரூ.39.5 லட்சம் மதிப்பிலான 455 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

மேலும், எஸ்ஐ ராஜா உள்ளிட்ட தனிப்படையினரை எஸ்பி பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பிக்கள் கார்த்திக், கணேசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாநிதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>