குடவாசல் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்று பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, வாஷ்பேஷின்

திருவாரூர், ஏப்.20: குடவாசலில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி அரசின் உத்தரவையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம் மற்றும் இறைச்சி கடைகள், மார்க்கெட் பகுதிகளில் பிளஸ்டிக் சின்டெக்ஸ் தொட்டி புதிதாக நிறுவி குடிநீர் வசதி செய்து அதன் அருகே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கை கழுவும் வாஷ்பேஷின்கள் அமைக்கப்பட்டது.

கொரோனாவையொட்டி புதிதாக அமைக்கப்பட்ட வாஷ்பேஷன் அருகே மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் கொரோனா விளக்கம் படங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இந்நிலையில், தற்போது கைகழுவி விட்டு பஸ் நிலையம் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட தற்காலிக சின்டெக்ஸ் குடிநீர் வசதியும், கை கழுவும் பேஷினும் போதிய பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.

கொரோனா தொற்று 2வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில், அரசு உத்தரவின்படி பொதுமக்களை முக கவசம் அணிய சொல்வது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க சொல்வது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் குடவாசல் காவல்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சார்பில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராத தொகையாக ரூ.200ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் அபராதம் வசூலிக்கும் இடத்தின் அருகிலேயே இந்த தற்காலிக குடிநீர் தொட்டியும், கைகளை சுத்தப்படுத்தும் வாஷ்பேஷனும் உள்ளது பேரூராட்சி நிர்வாகத்திற்கும், சுகாதார அலுவலர்களின் கண்களுக்கும் இது சுகாதார சீர்கேடாக தெரியவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் தொட்டி மற்றும் வாஷ்பேஷின்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>