புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு

புதுக்கோட்டை, ஏப்.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவைப் பருவத்திற்குத் தேவையான உரங்கள், அனைத்துத் தனியார் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனவும், மண்வள அட்டைப் பரிந்துரைப்படி உரமிட வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராம.சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவருவதைத் தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தற்பொழுது மாவட்டத்தில் 4800 எக்டர் பரப்பு நெல் சாகுபடி, 2700 எக்டர் பரப்பு உளுந்து, மக்காச்சோளம் போன்ற இதர பயிர்கள் சாகுபடி, 10,889 எக்டர் பரப்பு தென்னைச் சாகுபடி ஆகியவற்றுக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது யூரியா 3,412 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி 647 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 1,699 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 3,080 மெட்ரிக் டன்களும் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உரங்களை வாங்கிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவசாயிகள் தாங்கள் நெல் சாகுபடி மேற்கொள்ளும்போது மண்வள அட்டைப் பரிந்துரையின்படி உரம் இட வேண்டும். தழைச்சத்து இடும்போது பிரித்து மேலுரமாக இட வேண்டும்.

குருணை வடிவிலான வேம்பு கலந்த யூரியாவை பயன்படுத்திட வேண்டும். இதனால் உரச் செலவு குறைவதோடு பூச்சி நோய் தாக்குதலின்றி நெற்பயிர் நன்றாக வளர்ந்து மகசூல் கொடுக்கும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக் கருவி மூலம் விநியோகம் செய்யப்படுவதனால் விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்கு செல்லும்போது தம் ஆதார் அட்டையினைக் கொண்டுசென்று உரம்; வாங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரம் வாங்கும்போது கட்டாயமாக ரசீது கேட்டுப் பெற்றுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களைப் பெற்று உரச் செலவினைக் குறைத்து அதிக லாபம் பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>