×

ஆண்டிபட்டி பகுதி கிராமங்களில் கொரோனா நோய் தடுப்பு பணி ‘கொர்’ சுகாதாரப் பணி சுணக்கம்; விழிப்புணர்வு ஜீரோ

ஆண்டிபட்டி, ஏப். 20: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் கொரோனா நோய் தடுப்பு பணி மந்த நிலையில் இருப்பதாக, ஊராட்சி நிர்வாகங்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது  அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு  பணி தீவிரமாகி வருகிறது. மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திருவிழா,  சுற்றுலாத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கும்  இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி  ஒன்றியப் பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நோய்த்தடுப்பு  பணிகளும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த  ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார்  150க்கும் மேற்பட்;ட கிராமங்களும், ஏராளமான உட்கிராமங்களும் உள்ளன. இந்த  கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும்  நோய்த்தடுப்பு பணிகள் துளியளவு கூட மேற்கொள்ளவில்லை.  குறிப்பாக  கோவில்பட்டி, கரட்டுப்பட்டி, முத்தனம்பட்டி, ரெங்கசமுத்திரம்,  ரெங்கநாதபுரம், டி.சுப்புலாபுரம், அணைக்கரைபட்டி, மூணாண்டிபட்டி,  புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம்  சார்பில் கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு பணிகள்  மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கிராம பகுதிகளிலும், சாலையின் ஓரத்திலும்  பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்காமலும், வீடுகளில் கிருமி நாசினி மற்றும்  பொதுமக்களுக்கு தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊராட்சி நிர்வாகம்  சார்பில் ஏற்படுத்தாமல் இருக்கிறது.

கிராமங்களின் ஆங்காங்கே கழிவுநீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால்  நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.இது குறித்து கிராம  மக்கள் கூறுகையில், ‘கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.  இந்தநிலையில்  ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்தஒரு நோய்த்தடுப்பு  பணிகளும் மேற்கொள்ளவில்லை. கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் என எதுவும்  ஊராட்சி நிர்வாகத்தினர் செய்யவில்லை. ஏற்கனவே, கடந்த முறை கொரோனா  தொற்றால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர். இந்த ஆண்டும் கொரோனா  தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் எந்த பணியும்  செய்யாமல், அலட்சியமாக இருக்கிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆண்டிபட்டி  கிராமப்புற பகுதிகளில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andipatti ,Awareness Zero ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...