கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் மதம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் வலியுறுத்தல்

அரியலூர்,ஏப்.20: கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் மதம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளனர். அது தொடர்பாக அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில்: ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியான, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவரை அலங்காரம் அமைப்பாளர்களை கொண்டது தான் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசனாகும். எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடியது அல்ல. விஷேசங்கள், விழாக்கள் நடைபெறும் காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் வேலை இருக்கும்.

இந்த தொழில்களில் கடை உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை முதலிடுகளாக்கி தொழில் சொய்து வருகின்றனர். இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக எங்களது வாழ்வாதாரம் இழந்து, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது தான் எங்களது தொழில் துளிர்விடக்கூடிய தருண்தில் தமிழக அரசு மீண்டும் ஒரு தொழில் முடக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் மதம் மற்றும் சமூகம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்த தடை செய்திருப்பது தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது.

எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் மதம் மற்றும் சமூகம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்திக் கொள்ளவும், அரங்குகள், மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீதம் நபர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் பொய்யாமொழி, மாவட்ட பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள் திருமானூர் வீரன், ஜெயங்கொண்டம் வீரமணி, செந்துறை பாஸ்கர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். முன்னதாக இவர்கள், தஞ்சை சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

Related Stories:

More