×

புதிதாக நீதிமன்றம் திறக்கும் உத்தரவை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஏப்.20: குன்னத்தில் புதிதாக 2 நீதிமன்றங்கள் திறக்கும் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 10 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வேப்பந்தட்டையில் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியன திறக்கப்பட்டன. அதேபோல் வருகிற 22ம் தேதி குன்னத்தில் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியன திறக்க சென்னை உயர்நீதி மன்றம் ஏற்பாடு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனிடையே போக்குவரத்து சிரமங்கள், வழக்காடிகளுக்கான அலைச்சல்கள் போன்ற காரணங்களுக்காக குன்னத்தில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கான உத்தரவை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த 16ம்தேதி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று (19ம் தேதி) குன்னத்தில் நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதுபஸ்டாண்டு பகுதியில் பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில், செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலையில், வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் அண்ணாதுரை, குமாரசாமி, பெரியசாமி, தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் வாசுதேவன், கோவிந்தராஜ், எழிலரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bar Association ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்