×

குண்டு மிளகாய் வத்தல்களுக்கு விலையிருந்தும் மகசூல் இல்லை கவலையில் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.20: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குண்டு மிளகாய் வத்தல்களுக்கு கூடுதல் விலை கிடைத்தும் மகசூல் இல்லாமல் போய் விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த பெரும்பாலான மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி, மிளகாய் செடிகள் பாதிப்படைந்தன.

மிளகாய் செடிகள் பாதிப்படைந்த நிலையிலும் சில விவசாயிகள் மீண்டும் மிளகாய் செடிகள் நடவு செய்தனர். ஆனாலும் காலம் கடந்து பயிர் செய்யப்பட்ட மிளகாய் செடிகள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. இந்த பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிய ஒரு சில வயல்களில் உள்ள மிளகாய் செடிகளில், மிளகாய் பழம் பறித்து, அவைகளை வெயிலில் வத்தலாக உலர்த்தி விவசாயிகள் தற்போது விற்பனை செய்து வருகின்றனர். மிளகாய் மகசூல் குறைந்து, சந்தைக்கு குறைந்த அளவிலான குண்டு மிளகாய் வத்தல்களே தற்போது விற்பனைக்கு வருவதால், வத்தல் விலையில் காரம் அதிகரித்துள்ளது. ஒரு குவிண்டால் (100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் ரூ.33ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் இதே காலக்கட்டத்தில், வத்தல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு குறைந்த மகசூலே கிடைத்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சில்லரையில் குண்டு மிளகாய் வத்தல் ஒரு கிலோ ரூ.320 முதல் 350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நல்ல விலை கிடைக்கும் போது கூடுதல் மகசூல் இல்லாமல் போய் விட்டதே என விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...