×

இரட்டை வலையில் மீன்பிடித்தால் மீன்பிடி உரிமம் நிரந்தரமாக ரத்து மீன்வளத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை

ராமநாதபுரம், ஏப்.20: கடல் வளத்தை அழிக்கும் இரட்டை வலை மீன்பிடிப்பை முற்றிலும் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் நீண்ட கடல் எல்லை பரப்பளவை கொண்ட பெருமையுடையது ராமநாதபுரம். இங்கு பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள்,
1,500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

தமிழக கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்திற்கொண்டு ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலின்போது வலைகளில் சிக்கும் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளால் கடல் வளம் அழிக்கப்படுகிறது. இதற்கு இரட்டை வலை மீன்பிடிப்பே காரணம் என தெரியவந்தது. இதையடுத்து இரட்டை வலை மீன்பிடிக்கு அரசு தடை விதித்தது. ஆனால், ஒரு சில பகுதி விசைப்படகு மீனவர்கள் இரட்டை வலை மீன்பிடிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

மீன்வளத்துறை துணை இயக்குநர் இளம்வழுதி கூறியதாவது: ‘‘விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல், மீன்பிடி தடை கால நிவாரணம், மழைக்கால நிவாரணம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.  ஒரு சில பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அரசு தடை செய்த வலைகளை தொடர்ந்து பயன்படுத்தி மீன் வளத்தை அழித்து வருவது வேதனை அளிக்கிறது. மீன் பிடி தடை காலம் நீங்கிய பிறகு மீண்டும் தொடங்கும் மீன்பிடியின் போது அரசு தடை செய்த வலையை பயன்படுத்தும் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படும், மீன்பிடி உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அவர்களுக்கு மீன்வளத்துறை வழங்கும் அனைத்து உதவிகளும் முற்றிலும் நிறுத்தப்படும்’’என்றார்.

Tags : Deputy Director of Fisheries ,
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை