ஆர்.எஸ்.மங்கலம் அருகே நிழற்குடையின்றி வெயிலில் பொதுமக்கள் கடும் அவதி

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே நிழற்குடை இல்லாமல் பொதுக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் புதிய நிழற்குடை அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.ஆர்.மங்கலம் விலக்கு உள்ளது. இங்கு உள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்துதான் ஏ.ஆர்.மங்கலம், கொன்னக்குடி, பகவதி மங்களம், விளத்தூர், நடுவக்குடி, குமரன் காளி, கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் ராமநாதபுரம், திருவாடானை, தேவகோட்டை,காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு பஸ்க்கு செல்ல வருவோர்கள் நிற்பதற்கு கூட இங்கு நிழற்குடை இல்லாமல் வெயிலில் அவதிப்படுகின்றனர். ஆகையினால் மாவட்ட நிர்வாகம் ஒரு நிழற்குடையை கட்டி தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்களது கிராமங்களிலிருந்து எந்த பொருள்கள் வாங்க வேண்டுமென்றாலும் டவுன் பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலம் அல்லது திருவாடானை போன்ற நகர் பகுதிகளுக்கு தான் போக வேண்டும். இச்சூழ்நிலையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வயதானவர்களும், குழந்தைகளும் பெரும் அவதிப்படும் நிலை உள்ளது. ஆகையால் இங்கு ஒரு நிழற்குடை அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இங்கு ஒரு நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: