கொரோனா ஊரடங்கு காரணமாக பூம்புகார் சுற்றுலா தலம் வெறிச்சோடியது

சீர்காழி, ஏப்.20: கொரோனா ஊரடங்கையொட்டி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூம்புகார் கடற்கரை வெறிச்சோடியது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. பண்டைய காலத்தில் சோழர்களின் முக்கிய துறைமுகமாக பூம்புகார் இருந்து வந்துள்ளது. கோவலன்- கண்ணகி வாழ்ந்த பூம்புகார் ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது தமிழக முதல்வர் கருணாநிதி 1973ம் ஆண்டு பூம்புகார் நகரை உருவாக்கி திறந்து வைத்தார்.

சுற்றுலாத் தலமாக விளங்கும் பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம், வண்ணமலர் பூங்கா, நீச்சல் குளம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், கிளிஞ்சல் வீடுகள் என பொதுமக்களை கவரும் வகையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி உருவாக்கித் தந்தார். ஆனால் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்படுகிறது.

பூம்புகார் சுற்றுலா தளத்தை பார்வையிட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று வராமல் இருக்க தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளதால் பூம்புகார் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவால் மீன், கருவாடு வியாபாரிகள், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

More