மயிலாடுதுறை அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

மயிலாடுதுறை, ஏப்.20: மயிலாடுதுறை அருகே 6 மாதமாக கண்டுகொள்ளப்படாத குடிநீர் குழாய் உடைப்பை தினகரன் செய்தி எதிரொலியால் நகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரிசெய்யும் பணி மேற்கொண்டனர். மயிலாடுதுறை அருகே மணல்மேடு வில்லியநல்லூர் பாதையில் உள்ள பாலாகுடி வாய்க்கால் ஓரம் 5அடி ஆழத்தில் குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறி அருகில் உள்ள பாலாக்குடி வாய்க்காலில் வீணாக ஓடியது. கடந்த 6 மாதகாலமாக இதனை சம்மந்தப்பட்ட நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறு நல்ல குடிநீர் யாருக்கும் உபயோகம் இல்லாமல் விழலுக்கு பாய்கிறது வேதனை அளிக்கிறது என்றும், உடனடியாக பாலாகுடி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பாலாக்குடி வாய்க்காலில் கலக்கும் இந்த குடிநீர் எங்கே செல்கிறது, எந்த துறையினர் இதை பராமரிக்கவேண்டும் என்று கண்டுபிடித்து சரிசெய்யவேண்டும் என்று பாலாகுடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தண்ணீர் தொடர்ந்து வெளியேறிவருவதை வீடியோவாக எடுத்து அப்பகுதி மக்கள் வலைதளங்களில் விட்டுள்ளனர். இந்த செய்தி கடந்த 18ம் தேதி தினகரனில் படத்துடன் வெளியாகியிருந்தது. அதையடுத்து 18ம் தேதி மதியம் மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள் வில்லியநல்லூர் பாலாகுடி பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர்.

கடந்த 6 மாதமாக வெளியேறிய குடிநீர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மயிலாடுதுறை நகராட்சிக்குக் கொண்டு செல்லப்படும் தண்ணீர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நேற்றுமுன்தினமே பொக்லைன் இந்திரம் மூலம் அந்த இடத்தை பள்ளம் தோண்டி அதை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், சரிசெய்த நகராட்சி நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

More