அலங்காநல்லூரில் அதிகாரிகள் அலட்சியம் ஒரே மாதத்தில் குண்டும், குழியுமாக மாறிய சாலை

அலங்காநல்லூர், ஏப். 20: மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு பகுதி போக்குவரத்திற்கு பிரதான சாலையாக உள்ள நெடுஞ்சாலையில் கடந்த மாதம் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் 10 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலை பல இடங்களில் பெயர்ந்து விரிசல் விழுந்துள்ளது. குமாரத்திலிருந்து சின்னஊர்சேரி பிரிவு வரை பல்வேறு இடங்களில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறத்திலும் கிராவல் மண் பரத்தி சமப்படுத்தாத காரணத்தால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு விழா நிகழ்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போது இந்த சாலை பல்வேறு இடங்களில் பேஜ் ஒர்க் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே மீண்டும் தேர்தல் நேரத்தில் அவசர கதியில் புதிதாக இச்சாலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக முறையாகவும், தரமாகவும் சாலை அமைக்கப்படவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலை ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பல இடங்களில் வெடிப்பு விழுந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.  இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்று கூறினர்.

Related Stories:

More